பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாணத்தில் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாடு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், முல்லைத்தீவு, கேப்பாபிளவு, வசாவிலான், தையிட்டி ஆகிய பகுதிகளில் தனியார் காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விவசாய காணிகளை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வைத்திருப்பது முறையற்றது என்றும், காணி உரிமையாளர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.