கல்விச் சீர்திருத்தங்கள் முன்னேற்றம்: 2027ல் தரம் 6க்கு புதிய மாற்றங்கள் – பிரதமர் | Virakesari.lk 05.05.2026

இலங்கையில் கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 2027 ஆம் ஆண்டில் தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்வி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கான பாடக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கற்றல் தொகுதிகள் மீளாய்வு செய்யப்பட்டு, அச்சிடும் பணிகள் இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். மேலும், ஜூன் மாதத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்படும் என்றும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 2026 இல் தரம் 1 க்கும், 2027 இல் தரம் 2 க்கும் புதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த முழுமையான கல்வி மாற்றங்களும் தேசிய மட்டத்திலான வழிநடத்தல் குழுவின் மேற்பார்வையில் இடம்பெறுவதாகவும், இதற்கு உலக வங்கியின் நிதி உதவி எதனையும் பெறவில்லை என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்தார்.



















