எல்ல பகுதியில் உள்ள 98 ஏக்கர் ரிசோர்ட் - ஸ்பா நிறுவனத்தை விரிவாக்குவதற்காக, இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் வெல்ல க்ரூப் இடையே 5.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் 36 மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதன் மூலம் 11 சொகுசு வில்லாக்கள், 32 டீலக்ஸ் அறைகள், புதிய உணவகம், யோகா மற்றும் ஆரோக்கிய மையம் ஆகியவை அமைக்கப்படும். சில வில்லாக்களில் சூடாக்கப்பட்ட நீச்சல் குளங்கள் இடம்பெறும். இந்தத் திட்டம் மூலம் ஊவா மாகாணத்தில் சுமார் 150 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இயற்கையோடு இணைந்த வடிவமைப்பைக் கொண்ட இந்த விடுதியின் விரிவாக்கம், இலங்கையை உலகளாவிய சொகுசு சுற்றுலாத் தலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.