ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அமைச்சின் செயலாளர் ஒழிந்துகொள்வதா? ; பத்தரமுல்ல சீலரத்ன தேரர் | Virakesari.lk 05.05.2026

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறையிடச் சென்ற ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பண்டார மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திங்கட்கிழமை (04) அமைச்சகத்திற்குச் சென்றபோது, செயலாளர் தன்னைச் சந்திக்காமல் தவிர்த்ததாக அவர் குற்றம் சாட்டினார். பயிற்சியாளர்களால் வீராங்கனைகள் பாலியல் இலஞ்சம் மற்றும் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலமான சிறுமிகளின் பாதுகாப்பு முக்கியமானது என்றும், அமைச்சகத்தின் அலட்சியம் தொடர்ந்தால் நீதிமன்றம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை நாடப்போவதாகவும் அவர் எச்சரித்தார். தகுதியற்ற நபர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளதால் விளையாட்டுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், மக்களின் பிரச்சினைகளை அலட்சியம் செய்யும் அதிகாரிகளை அரசு உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.














