இலங்கை அரசாங்க சேவையில் நீண்டகாலமாக தற்காலிக ஒப்பந்தம் மற்றும் பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றும் சுமார் 1 லட்சம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் அபயரத்ன தெரிவித்துள்ளார். புதன்கிழமை (06) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், குறிப்பாக 2019 செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதவிகளில் இணைந்து தற்போது வரை சேவையில் உள்ள 98,800 ஊழியர்கள் இந்தப் பணி நிரந்தரத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். இந்த பணி நிரந்தரத்தைப் பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 180 நாட்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதோடு, பதவிக்குரிய கல்வி மற்றும் ஏனைய தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அரசியல் பின்னணி பாராமல், நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், எதிர்கால அரச நியமனங்கள் வெளிப்படையான போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.