சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய சாசனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் ; இலங்கைக்கான யுனிசெப் வெளியிட்ட அறிக்கை | Virakesari.lk 07.05.2026

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய சாசனத்திற்கு இலங்கை அமைச்சரவை மே 4ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியதை யுனிசெப் வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கை, சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்தி, இலங்கையின் மாற்றுப் பராமரிப்புக் கொள்கையை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என இலங்கைக்கான யுனிசெப் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, யுனிசெப் இலங்கையில் தேசிய மாற்றுப் பராமரிப்புக் கொள்கை உருவாக்கம், வதிவிடப் பராமரிப்பு நிறுவனங்கள் கணக்கெடுப்பு, மற்றும் மாகாணத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல் போன்ற பணிகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, 2018 முதல் நிறுவன ரீதியான பராமரிப்பில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 30% குறைந்துள்ளது, 6,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சேர்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது, மேலும் 2,000 சிறுவர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். எனினும், 8,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இன்னும் பராமரிப்பு நிலையங்களில் உள்ளனர். வறுமை, வன்முறை, சமூகப் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் சிறுவர்கள் குடும்பங்களை விட்டுப் பிரிகின்றனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உலகளாவிய சாசனம் வழிகாட்டுகிறது. குடும்பம் சார்ந்த பராமரிப்புக்கு முன்னுரிமை அளித்தல், நிறுவனமயப்படுத்தப்பட்ட பராமரிப்பிலிருந்து விலகுதல் போன்ற கொள்கைகள், வழக்கு முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், குடும்ப ஆதரவு சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவை முக்கியம். யுனிசெப், இந்த அர்ப்பணிப்பை நிலையான மாற்றமாக மாற்ற அரசாங்கத்திற்கும் அதன் கூட்டாளர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.














