நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் முயற்சி அரசாங்கத்தின் இரகசிய நோக்கம் என்ன? - ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி | Virakesari.lk 03.06.2026

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சி, ஐக்கிய மக்கள் சக்தி மத்தியில் கடுமையான விவாதங்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இத்தருணத்தில் இவ்வாறானதொரு முடிவை எடுப்பதற்கான தேவை குறித்து அரசாங்கம் எவ்வித விளக்கமும் அளிக்காதது, இது குறித்து ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அரசியலமைப்பினால் நிர்ணயிக்கப்பட்டதொன்றாகும், அதில் மாற்றங்கள் அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மட்டுமே சாத்தியமாகும். தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் 194 ஆம் பக்கத்தில், புதிய அரசியலமைப்பு வரைபு செய்யப்பட்டு, அது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின் மூலம் அரசாங்கம் அரசியலமைப்பை மீறுவதுடன், நீதித்துறையின் சுயாதீனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


















