வழக்கு தாமதங்களுக்கு பணியாளர் வெற்றிடங்களே காரணம்: தீர்வு காண நடவடிக்கை - நீதி அமைச்சர்! | Virakesari.lk 03.06.2026

நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமடைவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பிற நீதித்துறை நிறுவனங்களில் உள்ள பணியாளர் பற்றாக்குறையே முக்கிய காரணம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நீதி அமைச்சில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிறைவேற்றுச் சபைத் தலைவர் ரெய்ன் தம்சார் தலைமையிலான பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனை சுட்டிக்காட்டினார். சிறுவர்கள் தொடர்பான சட்டங்கள், வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் சாட்சியமளிக்கும் வசதிகள், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டம், மற்றும் வழக்குகளை விரைவுபடுத்துதல் போன்ற விடயங்களும் விவாதிக்கப்பட்டன. கண்டி நீதிமன்றத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வீடியோ மூலம் சாட்சியமளிக்கும் பிரத்தியேக அறை வசதியை மற்ற நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்தும், நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திலும் இலங்கை சட்டக் கல்லூரியிலும் சிறுவர் சட்டங்கள் குறித்த பயிற்சி அளிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
















